தெருவில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்: சிறுவன் உட்பட 12 பேர் படுகாயம்
ராஜபாளையத்தில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள மங்காபுரம், முத்தன் தெரு மற்றும் ஆண்டத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இந்நிலையில், இந்த நாயை மற்ற நாய்கள் விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வெறிநாய் தெருவில் செல்வோர், போவோரை எல்லாம் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் மங்காபுரத்தை சேர்ந்த முருகன், தமிழ்செல்வி, தாமோதரன் மற்றும் சிறுவன் ராஜேஷ் உள்ளிட்ட 12 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
மேலும் அங்கிருந்த பசு மாட்டின் தாடை மற்றும் காது பகுதிகளை வெறி நாய் கடித்ததில் மாட்டுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெறிநாயை அடித்துக் கொன்றனர்.
காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 12 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினர். நகரில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாகி உள்ளதால், பொது மக்கள் தெருக்களில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.