ஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா? :  வலுக்கும் போராட்டம்

ஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா? : வலுக்கும் போராட்டம்

ஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா? : வலுக்கும் போராட்டம்
Published on

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால், மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 18 வயது மகன் சஞ்சய் பிரசாத் கோவை அவினாசி சாலையில்  உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு உற்பத்தியியல் துறையில் படித்து வந்தார். கடந்த புதன்கிழமை வகுப்பில் சஞ்சய் பிரசாத்திற்கும், மற்றொரு மாணவரும் பேசிக்கொண்டிருந்த போது, அதை தவறாக எண்ணிய கணினித்துறை பகுதி நேர ஆசிரியர் முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். இருவரையும் திட்டியதோடு, பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதி அளிக்கப்படுமெனவும், அடையாள அட்டையை திருப்பி கொடுக்க முடியும் என்று முருகன் கூறியுள்ளார். பெற்றோரை அழைத்து வர பயந்த சஞ்சய் பிரசாத்தினை கடந்த வாரம் முழுவதும் வகுப்பிற்குள் விடவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 16 ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு சஞ்சய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாக முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் வைரம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையடுத்து கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அளித்து முதல்வர் வைரம் உத்தரவிட்டார். பகுதிநேர ஆசிரியரான முருகன் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முற்பட்டதாகவும், இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறிய முதல்வர், இந்திய மாணவர் சங்கத்தினர் தினேஷ், மனோஜ் ஆகிய இருவர் மீது மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவன் சஞ்சய் பிராசாந்தை திட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், விரைவில் கல்லூரி மாணவ தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட மாணவர்களின் 8 கோரிக்கைகள் மாணவர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்வதாக கல்லூரி தரப்பு சொன்னதை அடுத்து போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com