கின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன்

கின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன்
கின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன்

தருமபுரியில் சாக்பீஸில் ஓவியம் வரைந்து அசத்தும் பாலிடெக்னிக் மாணவனுக்கு கின்னஸ் சாதனைக்கு செல்வதற்கான வழிகாட்டலுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

தருமபுரி குமாரசாமிபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். வீட்டிலயே துணிதைக்கும் (டைலர்) தொழில் செய்து வருகிறார்.  இவரது மகன் கவியரசு தருமபுரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கவியரசு நான்காம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், ஆசிரியர்கள் எழுதி கீழே போடும் சாக்பீஸ் கொண்டும் மீதமாகும் சாக்பீஸ் கொண்டும் கத்தி, கிரீடம் போன்றவற்றை ஓவியமாக வரைந்து வந்துள்ளார். இதுவே நாளடைவில் சார்பீஸில் ஓவியம் வரைந்து ஒரு வரலாறு படைக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 

இந்நிலையில் தற்போது யாரும் செய்திடாத ஓவியங்களை சாக்பீஸில் வரையும் முயற்சியில் ஈடுபட்டு வரைந்துள்ளார். ஒரு இன்ச் சாக்பீஸில், முருகன், மதுரை மீனாட்சியம்மன், விநாயகர், ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களுக்கு இடையில் உருளக்கூடிய பந்து, புத்தர் சிலை, ஆயிரங்கால் மண்டபத்தில் உருளக்கூடிய பந்துக்கடியில் புத்தர் சிலை, அதற்கு கீழ் தாமரை மலர் என தொடர்ச்சியாக வரைந்து சாதனை செய்துள்ளார். மேலும் 10 தலை ராவணன் சிற்பம், சங்கிலி, தூணில் உருளக்கூடிய பந்து ஆகியவற்றையும் வரைந்துள்ளார். 

கின்னஸ் சாதனை படைத்த 2.5 மி.மீ உயரத்தை மிஞ்சும் அளவில் 2 மி. மீ உயரத்திற்கு புத்தர் சிலையை வடிவமைத்து  சாதனை புரிந்துள்ளார். மேலும் அண்மையில் டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சாக்பீஸில் வரைந்து அசத்தியுள்ளார். இவர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆனால் கின்னஸ் சாதனைக்கான போட்டியில் கலந்து கொள்ள வழிமுறைகள் தெரியாமல் வெறும் இலட்சியத்தோடு கவியரசு இருந்து வருகிறார். இவரது பெற்றோர்களுக்கு படிப்பறிவில்லாததால், உரிய வழிமுறைகள் தெரியாமல் உள்ளனர். எனவே தனது கின்னஸ் சாதனை கனவுக்கு யாராவது வழிகாட்டுவார்களா என்ற ஏக்கத்தில் கவியரசு இருந்து வருகிறார். 

தகவல்கள் : விவேகாநந்தன் ,செய்தியாளர்- தருமபுரி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com