நிர்மலா தேவி வழக்கு: அந்த செல்வாக்கான நபர்கள் யார்? உயர்நீதிமன்றத்தில் மனு!
நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குத் தூண்டிய பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் காவல் துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று இரவு நிர்மலா தேவி, அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார். அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்ப, நிர்மலா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்மலா தேவியை விசாரிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்தானத்தை ஆளுநர் நியமித்துள்ளதால், தங்கள் விசாரணைக்குழுவை வாபஸ் பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு தூண்டிய விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உத்தரவிட வேண்டும். நிர்மலா தேவி மீது ஆட்கடத்தல் பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட செல்வாக்கானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. வழக்கில் இருந்து சிலரை தப்பவைக்க மாநில அரசு நினைக்கிறது” என்று மனுதாரர் ஜி.எஸ்.மணி குறிப்பிட்டுள்ளார்.