மரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்

மரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்
மரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்

கஜா புயலினால் தரையில் சாய்ந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரத்தை தூக்கி நிறுத்தி மரத்திற்கு மறு உயிர் கொடுத்துள்ள இளைஞர்களின் செயல் காண்போரை நெகிழச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பல லட்சக்கணக்கான மரங்கள் மண்ணில் சாய்ந்தன. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் வேரோடு சாய்ந்ததால் மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர். இறந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடும் பணியில் சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே உள்ள கரிசக்காடு கிராமத்தின் மையப்பகுதியில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தரையில் சாய்ந்தது.இத்தனை ஆண்டு காலம், ஒரு குறுங்காடு போல காட்சியளித்து கிராமத்து மக்களுக்கும் நிழலை கொடுத்து வந்த அந்த மரம் கஜா புயலினால் மண்ணில் சாய்ந்து வேதனை அளித்துள்ளது. இதனால் மரணத்தின் விளிம்பில் இருந்த அம்மரத்தை கிராமத்து இளைஞர்கள் அதை அப்படியே விட்டுவிட மனமின்றி மீண்டும் அம்மரத்தை நட முடிவு செய்தனர்.

அதன்படி மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்திவிட்டு ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மீண்டும் அந்த மரத்தை அதே இடத்தில் நிமிர்த்தி நட்டனர். பின்பு கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மரத்திற்கு தண்ணீர் ஊற்றினர். இன்னும் சில நாட்களில் அந்த மரம் மீண்டும் துளிர்விட்டு விடும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் கிராம மக்களோடு வாழ்ந்து வந்த அம்மரம் எங்கள் கண்முன்னே மரணத்தின் விளிம்பில் கிடப்பதை எங்களால் தாங்க முடியாமல் தான் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கிராமத்து இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com