அரசியல் களத்தில் புதிய திருப்பம்.. OPS-ஐ சந்தித்து பேசிய செங்கோட்டையன்!
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் எனவும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்த கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உட்பட அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் வரவேற்ற நிலையில், இந்த கருத்தை தெரிவித்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதனையத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசினார்.
இந்தசூழலில் செங்கோட்டையன் சொன்ன 10 நாட்கள் கெடு முடித்தபிறகு, தமிழக அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும், செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் சந்திப்பு
நேற்று சென்னை வந்துசென்ற செங்கோட்டையன் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என்று விளக்கினார்.
அதேநேரம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து என்னிடத்தில் யார் எல்லாம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றும், அதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தசூழலில் தான் நேற்று செங்கோட்டையன் சென்னை வந்துசென்றபோது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு சுமார் 2 மணிநேரம் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.