சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?!

சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?!
சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ஸ்டேன்ட் கட்டப்பட்டுள்ளது என்றும், அந்த புதிய பெவிலியனை வருகின்ற 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்றாக இருக்க கூடிய எம்.ஏ.சிதம்பரம் மைதானம், கடந்த 2011ஆம் ஆண்டு ரூ. 190 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் அப்போது பிரபல அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி பெவிலியன் மறுசீரமைக்கப்படவில்லை. அதனால் தற்போது அது முழுமையாக இடிக்கப்பட்டு ரூ. 90 கோடி மதிப்பீட்டில் மீண்டும் புதிய பொலிவுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று உள்ளது.

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள அண்ணா பெவிலியன், வீரர்கள் ஒரு தளத்தில் உள்ளரங்கில் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கில் இரண்டு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் குறித்தும், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் குறித்தும் ஒரு அருங்காட்சியம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. போட்டிகள் இல்லாத நேரங்களில் அருங்காட்சியகத்தை பார்வையிட மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகள் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்த சூழலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி, அதன் பின் ஐபிஎல் என தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெற உள்ளதால், மைதானத்தின் இறுதி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்களை திறந்து வைக்க உள்ளார்.

இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டபட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள்  தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com