\
BUS ACCIDENT
BUS ACCIDENTPT

ஓடும் பேருந்தில் திடீரென கழன்ற டயர்.. குன்னூர் மலைப்பாதையில் திக்திக்.. நடந்தது என்ன?

குன்னூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று சாலையில் உருண்டோடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர்கள் - ஜான்சன் & ராஜ்குமார்.ர

சினிமாவில் வரும் காட்சியைப்போல, ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு பேருந்தை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பிளாக் பிரிட்ஜ் பகுதியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று ஊட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் முன்பக்க டயர் கழன்று சாலையில் உருண்டோடியுள்ளது. டயர் கழன்றதால் பேருந்து நிலைதடுமாறியுள்ளது. இதையடுத்து, ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில், பேருந்து சாலையில் நீண்டதூரம் உரசியபடியே சென்று நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 39 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

BUS ACCIDENT
BUS ACCIDENTPT

மலைப் பாதையில் பேருந்து திடீரென இவ்வாறு பழுதடைந்ததால், அதில் பயணம் செய்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, ஓடும் பேருந்தில் இருந்து முன்பக்க டயரே கழன்று ஓடியது, பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், டயர் இல்லாத நிலையில் பழுதடைந்த பேருந்து சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த மலைப்பாதையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பயணிகள், அரசுப் பேருந்துகள் குறிப்பாக, மலைப்பாதைகளில் இயக்கப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மலைப்பாதையில் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகூட பெரிய விபத்துக்குக் காரணமாகிவிடும் என்பதால், பேருந்துகளின் நிலையை முறையாக ஆய்வுசெய்த பிறகே அவற்றை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com