வினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை
இறுதிச் சுற்று என்ற பெயரில் சாலைப் பாதுகாப்பு குறித்து நூதன முறையில் நபர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அவேர்னஸ் அப்பா என்கிற சிவசுப்பிரமணியம். இவர் சாலை பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட சட்டை மற்றும் பேண்ட் அணிந்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இவரது சட்டையில் ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
வினோத உடை அணிந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார். அத்துடன் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறார். கடந்த மாதம் திருப்பூரில் துவக்கிய இவரது விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று ராமநாதபுரத்தில் உள்ளது. வினோத உடை அணிந்து அவர் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைவரும் ஆர்வமுடன் பார்த்துச்செல்கின்றனர்.