“காதலித்து கர்ப்பமாக்கியது உண்மைதான்” - காதலன் வாக்குமூலத்தால் போலீசார் அதிரடி முடிவு
காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்ததையடுத்து தவறை உணர்ந்த இளைஞர் போலீசாரின் அறிவுரையை ஏற்று உறவினர்கள் முன்னிலையில் கர்ப்பிணி காதலியை திருமணம் செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சேர்வைகரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், அதே கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் திருமனத்துக்கு முன்பே புனிதா கர்ப்பமானார்.
இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புனிதா பிரபுவிடம் வலியுறுத்தியுள்ளார். இவர்களின் காதலுக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த மாதம் பிரபு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு மாத காலமாக பிரபுவை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று பிரபுவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் புனிதாவை காதலித்து கர்ப்பமாக்கியது உண்மைதான் என்றும் தான் செய்த தவறை உணர்ந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் பிரபு ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அக்கிராமத்தினர் முன்னிலையில் வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து அறிவுரைகளை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அவர்களை உறவினர்கள் ஒன்றாக வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.