பட்டாபிராமில் காதல் தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவனும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி அடுத்த பட்டாபிராம் சார்லஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(24). அவரது மனைவி மதுமிதா(22). பொறியியல் பட்டதாரியான இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மனைவி மதுமிதா பிரபல தனியார் வங்கியில் நல்ல வேலையில் இருந்துள்ளார். ஆனால் வெங்கடேசனுக்கு சரியான முறையில் வேலை அமையவில்லை. இதனிடையே கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிகடி மோதல் முற்றி உள்ளது. இதனால் மனமுடைந்த மதுமிதா தன் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார். அவர்களும் இது எல்லோருடைய வாழ்கையிலும் வருவது போல சாதாரண சண்டைதானே போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர் சமாதனம் செய்துள்ளனர். ஆனால் வெங்கடேசன் தன்னுடைய சுய ரூபத்தை அவ்வப்போது தொடர்ந்து காட்டி வந்துள்ளார்.
பல சமயங்களில் தகராறு முற்றி மதுமிதாவை அடிக்கவும் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மதுமிதா கடந்த மே மாதம் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். போலீஸ் சமாதானத்திற்கு பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்த வெங்கடேசன், மீண்டும் வழக்கம்போல் சண்டையிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் இனியும் இவனோடு இருபத்தில் அர்த்தம் இல்லை என முடிவு செய்த மதுமிதா தனது பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது மாமனாரை தொடர்புக் கொண்ட வெங்கடேசன் ‘ நான் திருந்திவிட்டேன், இனி அவளிடம் சண்டையிட மாட்டேன். முதலாமாண்டு திருமணம் நாள் வருகிறது, இதனால் மதுமிதாவை அனுப்பி வையுங்கள்' என்று கேட்டுள்ளார்.
இதை நம்பி அவர்களும் மகளுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை மனைவி மதுமிதாவிடம் மீண்டும் சடையிட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மனநிலை மாறிய வெங்கடேசன் மனைவி மதுமிதாவை பலமுறை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். பின் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வர, ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடேசனை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் காவல்துறையினர் மதுமிதாவின் உடலை கைப்பற்றி ஆவடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு நாளில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.