நீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில், தண்ணீர் வசதியின்றி தவித்து வந்த மலைக்கிராமத்தில் புதிதாக கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமம் நெக்கனாமலை. நகரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஆயிரத்து 500 அடி உயர்த்திலுள்ள இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த கிராமத்திற்கு செல்ல சாலைவசதி இல்லை. அதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது.
அத்யாவசியப் பொருட்களை வாங்க வாணியம்பாடிக்கு வந்துசெல்ல ஆபத்தான மலைப்பாதையையே மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், நெக்கனாமலை கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் வேறு பகுதியில் இருந்துக்கூட இந்த கிராமத்திற்கு தண்ணீர் கொண்டுவர முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து நெக்கனாமலையில் 3 கிணறுகள் அமைக்க 12 லட்சம் ரூபாய் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் நடந்தேச்சென்று நெக்கனாமலையில், திட்ட இயக்குநர் பெரியசாமி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே இருந்த கிணறுகளை தூர்வாரி உடனடியாக மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மக்களின் தேவைக்காக சாலை அமைக்கப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.