'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம்
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்ற பெண்னுக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மாணிக்கத்திற்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த சங்கீதா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து சங்கீதாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனமுடைந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மாணிக்கத்திற்கு சேலம் மகளிர் நீதிமன்றம் 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து மாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை மனரீதியாக துன்புறுத்திய குற்றமாக கருத முடியாது எனவும், மாணிக்கம் மீதான குற்றச்சாட்டை காவல்துறையினர் சரிவர உறுதி செய்யத் தவறி விட்டதாகவும் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட 10ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.