பனை ஓலைகளால் மக்கள் மனங்களை கவர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி

பனை ஓலைகளால் மக்கள் மனங்களை கவர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி
பனை ஓலைகளால் மக்கள் மனங்களை கவர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி

உசிலம்பட்டி அருகே பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் மற்றும் விசிட்டிங் கார்டுகளை தயாரித்து மக்கள் மனங்களை எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர் ஒருவர் கவர்ந்து வருகிறார்.
    
மரங்கள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை வாரி வழங்குகின்றன. குறிப்பாக பனைமரம் நமக்கு நுங்கு, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு என ஏராளமான  பொருள்களை தருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் ஊட்டிய விழிப்புணர்வில் ஏராளமான இளைஞர்கள் தற்போது பனையைக் காக்கப் புறப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாமிநாதனும் ஒருவர்.

நெகிழிக்கு மாற்றாக பனை ஓலையில் பெட்டிகள், கொட்டான்கள், சோப்பு கவர்கள், பூச்செடிகள் வளர்க்கும் பெட்டிகள் போன்றவை தயாரித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டுகள், திருமணத்துக்கான மாலைகள் என இவர் தயாரிக்கும் பொருள்கள், பழைமை மாறாத புதுமையாக மிளிர்கின்றன.

திருப்பூர் மாவட்டம், ஆமந்தகடவு கிராமத்தை சொந்த ஊராக கொண்ட சாமிநாதன், தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரத்தில் வசிக்கிறார். படிக்கும் போது விவசாயத்தில் பெரிய அளவில் நாட்டம் இல்லை எனக் கூறும் சாமிநாதன் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு, 2012-ல் தனியார் வங்கியில் பணியில் சேர்ந்து மாதம் 30,000 ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். 

இதனிடையே நம்மாழ்வாரின் காணொளிகளைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பார்த்ததும் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டியுள்ளார். 2015-ல் வங்கிப் பணியை விட்டுவிட்டு டி.இராமநாதபுரத்தில் தனது நண்பருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த சாமிநாதனுக்கு மரபு சார்ந்த தொழில்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதனால் சாமிநாதனுக்கு தங்கள் பகுதியில் அதிகமாக உள்ள பனைமரத்தின் மூலம் கிடைக்கும் பனை ஓலையில் கைவினைப் பொருட்களை தயாரிப்பது என முடிவு செய்தார். இதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த தனது நண்பரிடம் ஓலைப் பின்னல்களைக் கற்றுக்கொண்ட சாமிநாதன் பனை ஓலையில் பெட்டிகள், சோப்பு கவர்கள், பூச்செடிகள் வளர்க்கும் பெட்டிகள் போன்றவைகளை தயாரித்து வருகிறார். 

இந்நிலையில் இதிலும் புதிய முயற்சியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் மற்றும் விசிடிங் கார்டு, திருமண மாலை உள்ளிட்ட பொருட்களை தயாரித்த சாமிநாதன், முதன்முறையாக தனது திருமணத்தின் போது அதை செயல் வடிவமாக்கினார். ஆம்; அவரது திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண மாலைகள், மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்தையும் பனை ஓலையில் செய்து அசத்தி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளார். 

“திருமணம் முடிந்த போது வங்கி வேலையை விட்டு வந்த கணவனுக்கு இந்தப் பனை ஓலை தொழில் எந்த அளவிற்கு லாபம் தரும் என என் வீட்டில் உள்ளவர்கள் கேள்வி கேட்டனர். தற்போது இந்தப் பனை ஓலையில் கைவினை பொருட்கள் மற்றும் திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து விற்பனை செய்வதில் அதிக லாபம் ஈட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் கல்லூரி பேராசிரியர் பணியை விட்டுவிட்டு இந்தத் தொழிலில் எனது கணவருடன் செய்து வருகிறேன்” என்கிறார் சாமிநாதனின் மனைவி கோகிலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com