கிணற்றில் விழுந்த குட்டியானையை போராடி மீட்ட வனத்துறை
நெல்லை மாவட்டம் புதுக்குடியில் கிணற்றில் விழுந்த யானையை பெரும் முயற்சிக்குப்பின் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே வனப்பகுதியையொட்டி இருக்கும் இடங்களில் யானைகள் உணவு தேடுவது வழக்கம். அப்படி நேற்று நள்ளிரவில் உணவு தேடி வந்த ஒரு குட்டி யானை எதிர்ப்பாரத விதமாக கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் தவறி விழுந்த யானை தொடர்ந்து பிளிரி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு கிராம மக்கள் சென்று பார்த்தபோது யானை கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்ததுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் பெருமுயற்சிக்குப் பின்னர் யானையை மீட்டனர். வனத்துறையினர் பொக்லைன் மூலம் கிணற்றின் ஒரு பகுதியை உடைத்து, யானை வெளியேறுவதற்காக தனி பாதை ஏற்படுத்தி, யானையை பத்திரமாக மீட்டுள்ளனர். மிகக் கடுமையாக முயற்சித்து யானையை மீட்ட வனத்துறையினருக்கு பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.