"தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை"- உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வதென்ன.. முழுவிபரம்

தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
supreme court
supreme courtpt desk

சல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட மாடுகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர் விசாரணை மேற்கொண்டது.

jalikattu
jalikattupt desk

வழக்கு விசாரணையின் போது சல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது, சாதுவான விலங்கான காளை, மாடுகள் வற்புறுத்தி இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறது. சல்லிக்கட்டு போட்டிகளில் கடுமையான விதிமுறை மீறல்கள் பின்பற்றப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பீட்டா உள்ளிட்ட விலங்குகள் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வாதமாக முன் வைத்தன.

ஆனால், சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறைவழிபாடு, கொண்டாட்டம் என பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய சல்லிக்கட்டு மீது தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியாது.

தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என சல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதிடப்பட்டது. சல்லிக்கட்டு என்பது அனைத்து விதிமுறைகளும் சரியாக வகுக்கப்பட்டு எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நடத்தப்படுகிறது. காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதையான விஷயம் என பல்வேறு வாதங்களை தமிழக அரசு தரப்பில் மிக விரிவாக முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாகவும் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததில் எந்த விதமான விதிமீறல்களும் இல்லை என்றும் குறிப்பாக இந்திய அரசியல் சாசன பிரிவின் 14 மற்றும் 21ன் படி அடிப்படை உரிமைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது

jalikattu
jalikattupt desk

மேலும் சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் பல நூறு ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருவதாகவும் எனவே கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக உள்ள இந்த சல்லிக்கட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

மெரினா போராட்டம் உள்ளிட்டவற்றை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் கலாச்சாரம் என்றாலும் கூட அதில், ஏதேனும் மிருகவதை உள்ளிட்டவை இருந்தால் அவை முழுமையாக சரி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கி சல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

”வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க தீர்ப்பு” - முதல்வர் ஸ்டாலின்

சல்லிக்கட்டு விவகாரத்தில் அரசு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு கொண்டுவந்த அவசரச்சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப்போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் மாபெரும் சல்லிக்கட்டு மைதானத்தை அரசு கட்டி வருவதாகவும் வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சல்லிக்கட்டு தீர்ப்பு : ஓபிஎஸ் Vs விஜயபாஸ்கர் Vs ஜெயக்குமார் கருத்து

ஓ.பன்னீர்செல்வம்:

சல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு, தனது தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

சி.விஜயபாஸ்கர்:

சல்லிக்கட்டு விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் நிலைப்பாடு மாறுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தமே காரணம் என முன்னாள் அமைச்சரும் வழக்கின் மனுதாரர்களில் ஒருவருமான சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜெயகுமார் கேள்வி:

சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு காரணமான அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம், சல்லிக்கட்டு நாயகனா? என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்சி பேதமின்றி வரவேற்ற தமிழக அரசியல் கட்சிகள்

அண்ணாமலை:

சல்லிக்கட்டிற்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள், கட்சி பேதமின்றி வரவேற்றுள்ளனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்கு பிரதமர் மோடியே காரணம் என குறிப்பிட்டுள்ளார். சல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

எதிர்காலத்தில் சல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியுடன் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இதற்கான சட்டப்போராட்டத்தை நடத்திய தமிழக அரசை பாராட்டுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com