தென்னைகளை பறிகொடுத்த சோகத்தில் விவசாயி தற்கொலை
பிள்ளைகளுக்கும் மேலாக பொத்திப் பராமரித்த தென்னைகளை கஜா புயலுக்கு பறிகொடுத்த துயரத்தில் தஞ்சை சோழகன் குடிகாட்டில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் நேர்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சோழகன்குடிகாட்டை அடுத்த ஆவிடநல்ல விஜயராபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். 55 வயதான இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடி செய்துவந்தார். 5 ஏக்கர் பரப்பிலான தென்னைகள் தந்த வருமானம்தான், இவரது குடும்பத்தின் வயிற்றுப் பசிக்கும், வாழ்க்கைத் தேடல்களுக்கும் கை கொடுத்துள்ளது. ஆனால், ஒரே இரவில் சூறையாடிச்சென்ற கஜா புயல் அத்தனை மரங்களையும் அடியோடு சாய்த்துவிட்டது.
வீழ்ந்துகிடந்த தென்னைகளை கண்டு கலங்கிப்போயிருந்த சுந்தர்ராஜ், விரக்தியுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில், தென்னைக்கு வைக்கக்கூடிய பூச்சிமருந்தை அருந்தி, அதேபகுதியில் உள்ள சுடுகாட்டில் சுந்தர்ராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில், விவசாயியின் துயர முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புயல் சூறையாடிச் சென்றாலும், வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. வாழ்ந்து காட்டுவதில்தான் வலிமை இருக்கிறது என்பதை மனதில் வைத்து இதுபோன்ற முடிவுகளை யாரும் நாடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.