வீடு வீடாகச் சென்று குடிநீர் வழங்கும் விவசாயி
பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை விவசாயி ஒருவர் வீடு வீடாகச் சென்று வழங்கி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சேவை செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பம், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடுமையாக குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் ஆழ்துளை கிணறுகளும் வற்றி, ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் எடுக்க இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். ஆழ்துளை கிணறுகளில் ஆழப்படுத்தி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் தனது சொந்த செலவில் குடிநீர் வழங்க முடிவு செய்து டிராக்டர் மூலம் வீடு வீடாகச் சென்று தண்ணீர் வழங்கி வருகிறார். காலை முதல் மாலை வரை ஒரு வீட்டிற்கு பத்து குடம் குடிநீரை வழங்கி வருவதால் தங்களுக்கு தண்ணீர் பிரச்னை சற்று குறைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் அனுமதியளித்தால், தனது சொந்த செலவில் ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறுகிறார் விவசாயி சேகர்.
இவரது சேவை பெண்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மக்களின் குடிநீர் தேவையை தனி நபர் ஒருவர் செய்வது வரவேற்கதக்கது என்றும் இதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, அவருக்கு இதுவரை நாங்கள் அனுமதி வழங்கவில்லை என்று ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.