”என்னை பழிவாங்க மகனுக்கு எய்ட்ஸ் ஊசி போட்டுவிட்டார்” - போலி மருத்துவர்மீது தந்தை புகார்

”என்னை பழிவாங்க மகனுக்கு எய்ட்ஸ் ஊசி போட்டுவிட்டார்” - போலி மருத்துவர்மீது தந்தை புகார்
”என்னை பழிவாங்க மகனுக்கு எய்ட்ஸ் ஊசி போட்டுவிட்டார்” - போலி மருத்துவர்மீது தந்தை புகார்

திருவண்ணாமாலை ஈச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 24 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு போலி மருத்துவர் ஒருவர் எய்ட்ஸ் ஊசி போட்டதால் அவர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த போலி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகனின் தந்தை சாலையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் வெங்கடேசபெருமாள் (வயது 24). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் செல்வகுமார் என்பவர் செலுத்திய ஊசியில் தன்னுடைய மகனுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன்னுடைய மகனுடன் முற்றுகையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் அரசு பேருந்து ஊழியர் ஆவார். அவர் அதே பகுதியில் மருத்துவம் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் செல்வகுமார், ஏழுமலையிடம் 2 1/2 ஏக்கர் நிலத்தை தனக்கு கொடுத்துவிடு என்று கேட்டதாகவும், ஆனால் ஏழுமலை நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பழிவாங்கும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏழுமலை வீட்டில் மாற்றுத்திறனாளி மகன் வெங்கடேசபெருமாள் தனியாக இருந்தபோது செல்வகுமார் என்பவர் வெங்கடேசபெருமாளிடம் உன்னுடைய அப்பா ஊசி போட சொல்லி இருக்கிறார் என்று கூறி ஏழுமலை மகனுக்கு ஊசி போட்டதாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்கு வந்த அப்பாவிடம் மகன் வெங்கடேசபெருமாள் மருத்துவர் எனக்கு ஊசி போட்டார் என கூறியுள்ளார். பின்னர் செல்வகுமாரை தொடர்பு கொண்டு என்னை கேட்காமல் ஏன் என் மகனுக்கு ஊசி போட்டாய் என ஏழுமலை கேட்டபோது, அதற்கு செல்வகுமார் சரியாக பதில் அளிக்காமல் போனை வைத்து விட்டதாகவும், பின்னர் 2019ஆம் வருடம் ஏழுமலையின் மகன் மாற்றுத்திறனாளி வெங்கடேசபெருமாளுக்கு ஊசி போட்ட இடத்தில் கட்டி வந்ததாகவும், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசபெருமாளுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, ”எங்கள் வீட்டில் யாருக்கும் எய்ட்ஸ் இல்லை எப்படி என் மகனுக்கு எய்ட்ஸ் வந்தது” என அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் போலி மருத்துவர் செல்வகுமார் செலுத்திய ஊசி மூலமாகத்தான் எய்ட்ஸ் நோய் பரவியது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பலன் இல்லாததால் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் புரண்டு தன்னுடைய மகனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் ஏழுமலை. பின்னர் அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com