\
போலி வழக்கு தொடரப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

போலி வழக்கு தொடரப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

போலி வழக்கு தொடரப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Published on

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுதவதாகவும் அதனை தடுத்து நிறுத்த கோரியும் பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி. முத்துக்குமார் வழக்கில் குறிப்பிடப்பட்ட அந்த பகுதிகளில் செயல்படும் மணல் குவாரிகள் அனைத்தும் முறையாக உரிமம் பெற்று தான் செயல்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் வழக்கை தொடுத்த மனுதாரர் சிலம்பரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டதாகவும், தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மனுதாரருக்கு எதிராக சட்டவிரோத மணல் குவாரி நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதால் இவ்வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனுதாரர் தரப்பில் இவை தன்மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எனவும், இது பொதுநலத்துடன் தான் கொடுக்கப்பட்ட வழக்கு எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மணல் குவாரிகள் அனைத்தும் முறையான உரிமம் பெற்று தான் செயல்படுகிறது என்பதும், சட்ட விரோதமாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை என்பதும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து தெரியவருவதாக தெரிவித்தனர். மேலும் முறையாக விசாரிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com