மீண்டும் அதிர்ச்சி! சென்னையில் தாக்கப்பட்ட மற்றொரு அரசு மருத்துவமனை மருத்துவர்! நடந்தது என்ன?
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் ஹரிஹரன் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மருத்துவரை தாக்கிய நபர் திருவான்மியூரைச் சேர்ந்த பரத் (35) என்பது தெரியவந்துள்ளது.
எதனால் மருத்துவர் மீது தாக்குதல்? என்ன நடந்தது?
பரத் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கிறார்.
அந்த வகையில் இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது மருத்துவர் ஹரிஹரன் என்பவரை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார் என்பது தெரியவந்தது. இதில் காயமடைந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வண்ணாரப்பேட்டை போலீசார் பரத் என்ற நபரைத் தேடி வருகின்றனர்.
இதேபோல சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.