உறவினர்கள் வராததால் நோயாளிக்கு உணவு ஊட்டிய மருத்துவர் - குவியும் பாராட்டு
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் நெஃப்ராலஜி துறையின் இயக்குநராகப் பணியாற்றி வரும் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம், நோயாளி ஒருவருக்கு உணவு ஊட்டிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் தற்போது புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகவும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் நெப்ராலஜி துறையின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கேரளாவில் உள்ள ஆலப்புழா டி.டி. மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்த இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் அதன் மேற்படிப்பை முடித்தார். பின்னர் லண்டன் மற்றும் கிளாஸ்கோவில் எஃப் எஸ் சி பி படித்துள்ளார்.
முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு சென்னையில் சி ஏ பி டி எனப்படும் டயாலிசிஸ் முறையை வெற்றிகரமாகச் செய்து முடித்து அந்தச் சிகிச்சை முறையை தெற்காசிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். பெரிடோனியல் டயாலிசிஸ் மருத்துவ முறைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
ஆசியக் கண்டத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நெஃபரோலஜி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சி ஏ பி டி பற்றிய பயிற்சியினையும் அளித்து வருகிறார். சிறுநீரக சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆசிரியராகவும் இவர் உள்ளார்.
இந்நிலையில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் அவரை கவனித்துக் கொள்ள வர முடியாத சூழல் நிலவி உள்ளது. அப்போது நோயாளிகளைப் பார்வையிட வந்த மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் அந்த நோயாளிக்கு உணவு ஊட்டிவிட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைவிட வேறு மருந்து இல்லை எனப் பலர் மருத்துவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.