எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் சாத்தியமா ?
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சுட்ட வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், உண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க முடியுமா ? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்று கொஞ்சம் பார்க்கலாம்.
எப்படி எப்போது அமைந்தது எய்ம்ஸ் ?
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956-ஆம் ஆண்டில் டெல்லியில் தொடங்கப்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சுருக்கமான பெயர்தான் எய்ம்ஸ்.
இப்போது இந்தியாவில் 9 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு !
மத்திய சுகாதாரத்துறையின் நேரடியான கட்டுப்பாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மத்திய அரசு செலவழிக்கிறது. நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் கூட உடல்நலக் குறைவின் போது எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாஜ்பாய் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் இந்தியாவின் முதல் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது, முதல் செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. இப்படிப் பல சிறப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு உள்ளது. குறிப்பாக எய்ம்ஸ்சில் மக்களுக்கு நோய் சிகிச்சைகள் அளிக்கப்படுவதோடு, மருத்துவக் கல்வியும், எதிர்கால நோய்களின் தடுப்பு குறித்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.
எய்ம்ஸில் மருத்தவும் படிக்கவும், சிகிச்சை கட்டணமும் !
எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தரமான மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியத் தடை உள்ளது. இந்த மருத்துவர்களுக்கான வீடுகள் மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்படுகின்றன. உலகத் தரத்திலான சிகிச்சைகள் ஏழைகளுக்கு இலவசமாகவும், மத்தியதர மக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திலும் எய்ம்ஸ்சில் வழங்கப்படுகின்றன.அதன்படி ஓராண்டு முழுவதும் எய்ம்ஸ்சில் சிகிச்சை பெற ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் ஆண்டுக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. எய்ம்ஸில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக் கட்டணமாக 25 ரூபாய், நாள் வாடகை 35 ரூபாய் செலுத்தினால் போதும். ஏழைகளுக்கு இவை அனைத்தும் இலவசம். வசதியான வார்டுகளை வேண்டுவோருக்கு எய்ம்ஸ்சில் ஏ கிளாஸ், பி கிளாஸ் வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு தலா 1,700 ரூபாய் மற்றும் 1,100 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் எய்ம்ஸ்
தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தமிழகம் வந்த குழுவினர் 5 இடங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து வரைவு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. பின்பு பல கட்ட நடவடிக்கைக்கு பிறகு கடந்த 17 ஆம் தேதி மதுரை தோப்பூரில், 1264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழகத்தின் மருத்துவத் தரம் உயரும் என்று ஒரு தரப்பினர் கூறும் அதே வேளையில், எய்ம்ஸில் படுக்கை வசதிகளும், அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவு என்பதால், அனைவருக்கும் அது பலனளிக்காது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சுட்ட வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா பெயர் சாத்தியமா ?
இந்த கோரிக்கை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட பேசிய போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனி மனிதர்களின் பெயரை வைக்க முடியாது. அதற்கு பல உதாரணங்களை கூறுகின்றனர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்களில் அந்தந்த மாநில பெயரையே வைக்கப்பட்டுள்ளதாகவும், எங்கையுமே தனி ஒருவரின் பெயர் இல்லை என்றும் கூறுகின்றனர். மேலும் இது போல விமான நிலையங்களுக்கு தனி நபர்களின் பெயரை வைப்பதால் பயணிகளுக்கு பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் விமான நிலையங்களுக்கு அந்தந்த நகரங்களின் பெயரையே சூட்டி வருகின்றனர். எனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றே தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் வைக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். எனினும் தனி மனிதர்களின் பெயரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு என்றே கூறலாம்.