தமிழக ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் மீது அரசு தரப்பில் அவதூறு வழக்கு!

தமிழக ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் மீது அரசு தரப்பில் அவதூறு வழக்கு!
தமிழக ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் மீது அரசு தரப்பில் அவதூறு வழக்கு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்த பின்னணியில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசி இருந்தார்.

இதையடுத்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசியது மீதான நடவடிக்கை எடுக்கக்கோரி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் ஜனவரி 14ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அவதூறாக இருப்பதாக கூறி, அவதூறு வழக்கு தாக்கல் செய்ய சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு ஜனவரி 15ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் அவதூறு வழக்கிற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com