சங்கிலியை பறிக்க முயன்ற திருடர்கள் : தடுத்த தம்பதி படுகாயம்
சென்னை எண்ணூர் கடற்கரை சாலையில் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்களை தடுத்த தம்பதி, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
சென்னை திருவொற்றியூர் ராஜா கடையைச் சேர்ந்த ஜெயக்குமார்-மீனா தம்பதி, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். எண்ணூர் கடற்கரை சாலையில் கே.வி.குப்பம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் இவர்களை பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், மீனாவின் கழுத்தில் இருந்த 21 சவரன் தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றுள்ளனர். உடனடியாக சுதாகரித்துக்கொண்ட மீனா, கொள்ளையன் கையோடு நகைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள், தம்பதியை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த தம்பதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் அண்மைக்காலமாக சங்கிலிப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.