
சென்னை குரோம்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கான்கிரீட் போடும் பணிகள் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென இரும்பு பைப் உடைந்து சாலையில் சென்ற நபர்கள் மீது காங்கிரீட் கலவை பீய்ச்சி அடித்தது. இதில், குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட பொதுமக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவ்வழியாகச் சென்ற மற்றொருவர் மீது காங்கிரீட் கலவை பட்டதால் ஆத்திரமடைந்த அவர், முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதுகாப்பின்றி பணி மேற்கொள்வதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து மற்றும் குரோம்பேட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட நபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.