கோவை: மூதாட்டியிடம் திருடிய 37 ரூபாயை 40 ஆண்டுகளுக்குப் பின் 3 லட்சமாக திருப்பிக்கொடுத்த தொழிலதிபர்!
செய்தியாளர்: பிரவீண்
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்து இங்கு வசித்து வரும் இவர், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்த போது தனது 15 வயதில் மூதாட்டி ஒருவரின் இல்லத்தில் இருந்த 37.50 ரூபாயை திருடியுள்ளார். பின்னர் இவரது குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இவர், பல்வேறு தொழில்களை செய்து வந்த நிலையில், தற்போது கோவை ரத்தினபுரி பகுதியில் சொந்தமாக கேட்டரிங் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற ரஞ்சித், தான் திருடிய மூதாட்டியின் 3 வாரிசுகளின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து தலா 70 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இது குறித்து ரஞ்சித் கூறுகையில், 17 வயது வரை தான் இலங்கையில் வசித்து வந்ததாகவும் அப்போது ஒரு பாட்டியின் 37.50 ரூபாய் பணத்தை திருடியதாகவும் பின்னர் இங்கு குடிபெயர்ந்து வந்து விட்டதாகவும் தெரிவித்தார். ஒரு நாள் பைபிளை படித்து கொண்டிருந்த போது, "துர்மார்கன் கடன் வாங்கி செலுத்தாமல் போகிறான்; நீதிமான் அந்த கடனை செலுத்துகிறான்" என்ற வாசகத்தை படித்ததாகவும் அதனை தொடர்ந்து வாங்கிய அனைத்து கடன்களையும் செலுத்தியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றையெல்லாம் பார்த்த போது அந்த பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பித் தர வேண்டுமென எண்ணியதாகவும் பெரும் முயற்சிக்கு பிறகு அந்த பாட்டியின் குடும்பங்களை சந்தித்து 3 வாரிசுகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் புத்தாடைகள் ஆகியவற்றை அளித்து தான் செய்த தவறை கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த குடும்பத்தினரும் இதனால் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தற்போது அவர்கள் எங்களுடைய உறவுகள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக பாட்டியிடம் திருடிய பணத்தை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து தின்பண்டங்கள் வாங்கி செலவழித்து விட்டதாகவும் கூறினார்.