அதிமுக கூட்டணி எம்எல்ஏ மீது நில அபகரிப்பு புகார்: நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சிறு தொழில் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக கீழ்வைத்தினான்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பூவை ஜெகன் மூர்த்திக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஓசூரில் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வரும் கே.ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நேமம் மதுரை கிராமத்தில் ஒரு ஏக்கர் 19 சென்ட் நிலத்தை 2006-ஆம் ஆண்டு வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகில் தன் நிலம் உள்ளதால், அவருக்கு விற்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும், வாங்கிய நாள் முதல் அதை நிம்மதியாக பயன்படுத்த முடியவில்லை என்றும், அவருக்கு விற்கச் சொல்லி தொந்தரவு கொடுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொண்ட போதும் மிரட்டல் விடுத்து தடுத்ததாகவும், தன் நிலத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்சி கொடிக்கம்பத்தை நட்டுள்ளதுடன், வாகனம் நிறுத்துவதற்கான ஷெட் ஒன்றையும் அமைத்துள்ளதாக பூவை ஜெகன் மூர்த்திக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க அவர்கள் அச்சப்படுவதால், பூவை ஜெகன் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மே 5ஆம் தேதி, நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கான அனைத்து ஆவணங்களுடனும் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகார் நில அபகரிப்பு பிரிவிற்கு மாற்றப்பட்ட பிறகு இதுகுறித்து விசாரிக்க நில ஆபகரிப்பு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டதால், தாசில்தார் உத்தரவுப்படி நிலம் அளவிடப்பட்டதாகவும், அப்போது தன்னுடைய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதை நில அளவையர் கண்டறிந்தும், பூவை ஜெகன் மூர்த்தியை காப்பாற்றும் வகையில் இதுவரை அந்த அறிக்கையை நில அபகரிப்பு பிரிவிடம் தாக்கல் செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நில அளவையர் அறிக்கையை நில அபகரிப்பு பிரிவில் ஒப்படைக்கவும், அதன் அடிப்படியில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர், நில அபகரிப்பு டி.எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னை: தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற திமுக பிரமுகர் கைது