கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதிய கார் - பதற வைக்கும் வீடியோ
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த காட்டங்கொளத்தூரை சேர்ந்த மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
எதிரே வந்த வாகனங்களை பார்க்காமல் அவர்கள் கடந்துள்ளனர். அப்போது, அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
கார் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தூக்கியெறியப்பட்டது. அத்துடன், காரும் மோதிய வேகத்தில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி தலைகீழாக சுழன்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவருக்கும் கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படட்னர். அங்கு, ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் மூவரும் சாலையை கடக்கும் பொழுது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.