இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சமா? – அரசு மருத்துவமனையின் அவலம்

இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சமா? – அரசு மருத்துவமனையின் அவலம்
இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சமா? – அரசு மருத்துவமனையின் அவலம்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க மருத்துவ உதவி பணியாளர் ரூ.500 லஞ்சம் வாங்கியதாக அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தோட்டக்கார தெருவில் வசித்து வந்தவர் மனோகரன் (68). இவருக்கு நுரையீரலில் பிரச்னை இருந்தால் கடந்த ஆறுமாத காலமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மனோகரனை கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மனோகரன் ஏற்கனவே இருந்துவிட்டதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மனோகரனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம் என்று உறவினர் கேட்டதற்கு, நாங்கள் ஏஆர் போட்டு விட்டோம் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு மனோகரன் உடலை தருவோம் என மருத்துவர் கூறியுள்ளார்.

பின்னர் பிணவறையில் மனோகரனின் உடலை வைப்பதற்காக மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா என்பவர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். அதற்கு மனோகரனின் உறவினர்கள் ரசீது கேட்டுள்ளனர். தர மறுத்த மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா, 500 ரூபாய் திருப்பிக் கொடுக்க முற்பட்டபோது வாங்க மறுத்த மனோகரனின் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து உயிரிழந்த மனோகரின் உறவினர்கள் கூறுகையில்... மதியம் மூன்று மணி அளவில் மருத்துவமனைக்கு வந்தோம். நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தவரை ஏஆர் பதிவு செய்ததால் உடற்கூறு ஆய்வு செய்துதான் தருவோம என கூறிய நிலையிலும் பிணவறையில் வைக்க 500 ரூபாய் லஞ்சம் கேட்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் 500 ரூபாய் கொடுத்த பின்பும் தொடர்ந்து எந்த ஒரு முறையான பதிலும் மருத்துவமனை தரப்பில் வழங்கவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டனர் எனக் கூறினர்.

இதையடுத்து மருத்துவர் மீதும் மருத்துவ உதவியாளர் மீதும் துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com