துப்புரவுப் பணியாளரின் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்கள்
சென்னை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாளை கேக் வெட்டி காவலர்கள் கொண்டாடி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர் அனுசுயா. காவல்நிலையத்தில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வரும் இவருக்கு இன்று பிறந்தநாள் என்று காவலர்களிடம் பேசும் போது யதேட்சையாக கூறியுள்ளார்.
இதனை அறிந்த பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உடனடியாக கேக் வாங்கி காவல் நிலையத்திலேயே அனுசுயாவின் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அனுசுயாவை அழைத்து அவரது கையால் கேக் வெட்டி சிறப்பு செய்துள்ளார். மேலும் ஆய்வாளர் துப்புரவுப் பணியாளருக்கு கேக்கை ஊட்டி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு அனுசுயாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. துப்புரவு பணியாளரின் பிறந்தநாளை காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுசுயா, துப்புரவுப் பணியாளராக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.