“என் மகளையே கிண்டல் பண்றீங்களா” - கோபப்பட்ட தந்தைக்கு நேர்ந்த கொடுமை!
தனது மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக்கேட்க சென்ற தந்தை, இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அணியாடா பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த தங்கும் விடுதியில் தங்கிச்செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்த ஆந்திர குடும்பம் ஒன்று, அந்த விடுதியில் தங்கியுள்ளது.
அடுத்த நாள் இரண்டு இளைஞர்கள் கோகுல்நாத் (28) மற்றும் வசந்தகுமார் (31) இளைஞர்கள் இருவர், ஆந்திர குடும்பம் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிள்ளனர். ஆந்திரக்குடும்பத்தின் தலைவர் ரவிகாந்த் வெளியே செல்லும் நேரத்தில், அவரது மகளை இந்த இளைஞர்கள் கிண்டல் அடித்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரவிகாந்த் இரண்டு இளைஞர்களையும் எச்சரித்துள்ளார்.
ஆனால் மீண்டும் ஒருமுறை அந்த பெண்ணை, இருவரும் கிண்டல் அடித்துள்ளனர். இந்த முறை ஆத்திரம் அடைந்த ரவிகாந்த் இளைஞர்களிடம் சென்று “என் மகளையே கிண்டல் பண்றீங்களா” கோபமாக தட்டிக்கேட்டுள்ளார். அந்த இளைஞர்கள் இருவரும் இவரை தாக்கி, கீழே தள்ளியுள்ளனர். இதில் சுவற்றின் மீது போய் விழுந்த ரவிகாந்திற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரவிகாந்த் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கோகுல் மற்றும் வசந்தை கைது செய்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.