50வது ஆண்டைக் கொண்டாட இருக்கும் அண்ணா மேம்பாலம்: புதிய தலைமுறை சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு!

சென்னையின் அடையாளமாகத் திகழும் அண்ணா மேம்பாலம், வரும் ஜூலை 1ஆம் தேதி பொன்விழா ஆண்டைக் கொண்டாட இருக்கிறது. இதையடுத்து நமது புதிய தலைமுறை, சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அண்ணா மேம்பாலம்
அண்ணா மேம்பாலம்twitter

நாட்கள் வேகவேகமாய் நகர்ந்தாலும் நம்மைவிட்டுப் பிரியாத நிகழ்வுகளை, இடங்களை என்றுமே மறக்க முடியாது. அதில் பலருக்கும் பல இடங்களைப் பிடிக்கும். அந்த வகையில் எல்லோரையும் வரவேற்று உபசரிக்கும் அன்னையாக விளங்கும் சென்னையின் அடையாளமாகத் திகழும் அண்ணா மேம்பாலமும் சிலருக்குப் பிடித்த இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

chennai road
chennai roadtwitter

இன்னும் சொல்லப்போனால், சென்னையில் இருப்பவர்கள், நிச்சயமாக அந்தப் பாலத்தைக் கடக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக என்றாவது ஒருநாள் அந்தப் பாலத்தின் மீது பேருந்திலோ அல்லது இதர வாகனங்களிலோ பயணித்திருப்பார்கள். இன்னும் சிலரோ, அந்தப் பாலத்தைத் தினமும் கடப்பவர்களாகக்கூட இருப்பர்.

சென்னையின் முக்கிய இடங்களான தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, கதீட்ரல் சாலை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு மிக முக்கியமான பகுதியாக இந்த அண்ணாசாலை விளங்கியது. இதனால், 1970களிலேயே சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்துத்தான் ஜெமினி சர்க்கிள் என்று சொல்லப்பட்ட அந்த இடத்தில் 1971ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. 250 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இந்த மேம்பாலம் அப்போதைய மதிப்பில் 66 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம், 1973ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

அண்ணா மேம்பாலம், கருணாநிதி
அண்ணா மேம்பாலம், கருணாநிதிtwitter

அத்துடன் அவர், அந்த மேம்பாலத்திற்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். இந்த மேம்பாலம்தான் தமிழகத்தின் முதல் மேம்பாலமாகவும் இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாகவும் புகழ்பெற்றது. இந்தியாவிலேயே நீண்ட மேம்பாலம் என்று பல்வேறு சாதனைகளை சுமந்து வரும் இந்த அண்ணா மேம்பாலம் வரும் ஜூலை 1ஆம் தேதியுடன் 50வது ஆண்டைக் (பொன்விழா) கொண்டாட இருக்கிறது. மக்களால் ’ஜெமினி பாலம்’ (இந்த மேம்பாலத்திற்கு அருகே நீண்டகாலமாக ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்ததால்) என்றும் அரசால் ’அண்ணா பாலம்’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம், இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பாலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

இன்றைக்கு சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டாலும், சென்னையின் பாரம்பரிய அடையாளமாக அண்ணா மேம்பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது; தலைமுறைகளைக் கடந்து மக்களின் உணர்வுகளை இணைத்து வருகிறது. மக்களை கவரும் விதமாக கண்ணைக் கவரும் வகையில் வளைவுகளைக்கொண்ட இந்த பாலம், பல நூறு கதைகளையும் நினைவுகளையும் இன்றுவரைக்கும் தாங்கி நிற்கிறது.

இந்தச் சூழலில் பொறுப்புள்ள ஊடகமான புதிய தலைமுறை, ‘அண்ணா மேம்பாலம் 50’, என்ற பொருளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தைக் கொண்டாடும் பொருட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஒழுங்கு செய்துள்ளது. பாலத்தைத் திரும்பிப் பார்க்கும் ஒரு நினைவுப் பாலமாய் அமைய இருக்கும், இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கின்றனர்.

பாலத்தின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் செம்மொழிப் பூங்காவில் ஜூலை 8ஆம் நாள் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பாலம் குறித்த கலைநிகழ்ச்சிகள், மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற இருக்கின்றன. அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். உறவுகளையும் உணர்வுகளையும் இணைக்கும் இந்த அரை நூற்றாண்டு காண இருக்கும் அண்ணா மேம்பாலத்தை அனைவரும் நிறைவாகச் சேர்ந்து கொண்டாடுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com