ராணிப்பேட்டையில் தந்தை கண்ணெதிரே 3 வயது குழந்தை கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த பதபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது கழிவு நீர் கால்வாய்கள் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே விடப்பட்டிருந்திருக்கிறது.
இந்நிலையில் எள்ளு பாறைப் பகுதியை சேர்ந்த விவேக் என்பவர் அவரது மகள் மித்ராவை (வயது 3) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தையை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும்படி தந்தை கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி தந்தை கண்ணெதிரே கழிவுநீர் கால்வாயில் குழந்தை விழுந்தது. இதைப்பார்த்து பதறிப்போன தந்தை உடனடியாக கழிவுநீர் கால்வாயில் குதித்து குழந்தையை மீட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளார் அவர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் முறையாக கால்வாய் தூர்வாரும் பணி செய்யப்படவில்லை அவர்களின் அஜாக்கிரதையால் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.