கோவை: வாயில் காயமடைந்த 12 வயது ஆண் யானை உயிரிழப்பு

கோவை: வாயில் காயமடைந்த 12 வயது ஆண் யானை உயிரிழப்பு
கோவை: வாயில் காயமடைந்த 12 வயது ஆண் யானை உயிரிழப்பு

மரக்குச்சியால் வாயில் காயமடைந்ததாக கூறப்படும் 12 வயது ஆண் யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை அடுத்த ஆனைகட்டிக்கு முன்னதாக உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் யானையை கண்காணித்தனர்.இந்த ஆய்வில் 12 வயது மதிக்கத்தக்க அந்த யானை, ஆண் யானை என்பதையும், வாயில் அடிபட்டதால் வனத்தை விட்டு வெளியே வந்து நிற்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். காயம்பட்ட யானைக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார், வாழை மற்றும் பலாப்பழத்தில் வலி நிவாரணம், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமாணம் மற்றும் காயம் ஆகியவற்றுக்கான மருந்துகளை வைத்து யானைக்கு சிகிச்சை அளித்தார்.


அதனைத்தொடர்ந்து இரவு வனத்திற்குள் சென்ற யானை, காலை வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழியின் அருகே படுத்து கிடந்துள்ளது. உடனடியாக சிகிச்சையைத் தொடர்ந்த வனத்துறையிர் காயம் காரணமாக யானையால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்தனர். இதனையடுத்து யானைக்கு குளுகோஸ், இரும்பு சத்திற்கான டானிக், வலி காயம் ஆறுவதற்கான மருந்து ஆகியவை செலுத்தப்பட்டது. இரவு 7 மணி வரை சிகிச்சையளிக்கப்பட்டும் யானை எழுந்திருக்கவில்லை.


இது குறித்து நேற்று தெரிவித்த மருத்துவர் சுகுமார் “ யானையின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. உணவு உட்கொள்ளும்போது வாயில் மரக்குச்சிகள் குத்தியதில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக யானை உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. அதன் காரணமாகவே யானை உடல் மெலிந்து காணப்படுகிறது. தற்போது கூட யானை உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது”என்றார்.

இந்நிலையில் 2 நாட்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அந்த யானை இன்று உயிரிழந்தது. காயத்தினால் 10 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால்  உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தகவல்  தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இடத்திலேயே யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com