அபூர்வ மூலிகை என ஆசிட் கொடுத்த போலி மருத்துவர் : கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி
திருப்பூரில் போலி மருத்துவர் அபூர்வ மூலிகை எனக் கூறி கொடுத்த ஆசிட்டால் சிறுமி ஒருவர் கடும் பாதிப்புக்குள்ளானர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் நூல் கடை நடத்தி வருபவர் தனபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண் ஒன்பதாவது படிக்கும் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு தோல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. நீண்ட நாட்கள் மருத்துவம் பார்த்தும் சரியாகாத காரணத்தால், தெரிந்தவர்கள் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மருகு மகேந்திரனை தொடர்பு கொண்டுள்ளார்.
அடுத்தநாள் தனபால் வீட்டுக்கு வந்த வைத்தியர் மருகு மகேந்திரன், சிறுமியின் பெற்றோரிடம் தான் பரம்பரையாக வைத்தியம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுமியின் தோல்நோய் பாதிப்பிற்கு கொல்லிமலையிலிருந்து வைரம் போன்ற அரிதான மூலிகை மருந்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த மருந்தை சிறுமி மீது தடவியதாக தெரிகிறது. இதனை நம்பிய பெற்றோர் ஐந்தாயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே சிறுமிக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பயந்து போன சிறுமியின் பெற்றோர் முறையான மருத்துவரிடம் காட்ட, சிறுமி மீது தடவப்பட்டது அபூர்வ மூலிகை மருந்தல்ல, டைல்ஸ் கற்களுக்கு ஊற்றப்படும் ‘ரெட் ஆசிட்’ மருந்து என தெரியவந்தது.
இதனால், சிறுமியின் தோல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய இயலாது எனவும் மருத்துவர் தெரிவித்தாக சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுதொடர்பாக போலி மருத்துவர் மருகு மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.