வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி

வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி
வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி

வேலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவரது மகள் நிவேதினி(14). கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவி நிவேதினி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்ததாக கூறி கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மாணவியை மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நிவேதினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், “தங்களது மகள் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளியில் இருந்து தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து சென்ற நாங்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு சென்ற போது எங்களது மகள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே எங்களது மகள் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும்” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com