95 வயதில் பனை மரம் ஏறி பிழைக்கும் முதியவர் - உதவுமா அரசு?

95 வயதில் பனை மரம் ஏறி பிழைக்கும் முதியவர் - உதவுமா அரசு?
95 வயதில் பனை மரம் ஏறி பிழைக்கும் முதியவர் - உதவுமா அரசு?

புதுக்கோட்டை மாவட்டத்தில் 95 வயது முதியவர் ஒருவர் பனை மரம் ஏறி பிழைத்து வருகிறார். ஆகவே அவருக்கு அரசு ஏதேனும் உதவித்தொகை வழங்கி உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

பெற்ற பிள்ளைகள் மூவர், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் என சொந்தங்கள் பலர் இருந்தும் யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் சொந்த உழைப்பை நம்பி வாழ்ந்து வருகிறார் 95 வயது முதியவர் ஒருவர்.

தள்ளாடும் வயதிலும் தன்னம்பிக்கையுடன் பனை மரம் ஏறும் இந்த முதியவரின் பெயர் செல்லையா. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு வயது 95 வயது. சிறிய குடிசை ஒன்றில் வசித்து வரும் செல்லையா, விவசாய வேலைக்குச் செல்வதுடன், கோடைக்காலத்தில் நுங்கு வியாபாரம் செய்துவருகிறார். மரத்திலிருந்து பலமுறை இவர் தவறி விழுந்தாலும், உயிரைப் பற்றி எவ்வித அச்சமும் ‌இன்றி பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார் இவர்.

பனை மரம் ஏறுதல், விவசாயக் கூலி வேலை செய்தல், பனை மட்டை வெட்டி குடிசை கட்டுதல் உள்ளிட்டவையே செல்லையாவின் ஆரம்பகட்ட பணியாக இருந்துள்ளது. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போக,  பிள்ளைகளும் அவரவர் குடும்பத்துடன் பிரிந்து போக தனி மரமாய் நின்ற செல்லையா தன் நம்பிக்கையை தளர விடாமல் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய இடத்தில் குடிசை அமைத்துக் கொண்டு தனியே சமைத்து வாழ்ந்து வருகிறார்.


  
மரம் ஏறுதல் என்பது இன்றைய கால இளைஞர்களுக்கு சவாலாக உள்ள நிலையில் 95 வயது முதியவர் ஒருவர் நாள்தோறும் மரமேறி வருவது காண்போரை வியக்க வைக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பனை மரங்களில் ஏறி நுங்கு பறித்து அதனை தனது சைக்கிளில் ஏற்றி 4 கிலோ மீட்டர் வரை தள்ளிக் கொண்டே வந்து கொத்தமங்கலம் கடைவீதியில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப தொகையில் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்தி வருகிறார் செல்லையா.

ஆகவே அரசு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஏதேனும் ஒரு சலுகைகளை அவருக்கு வழங்கினால், இவரின் எஞ்சிய கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com