கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் நகரில் 90 சதவிகிதம் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கஜா புயலால் மின்சார சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்ட போதிலும், துரிதமான முறையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கஜா புயலால் ஏறபட்டுள்ள மின்சார சேவை பாதிப்பு குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள திருவாரூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உயர் அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் நகரில் 90 சதவிகிதம் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கஜா புயலால் உயர்அழுத்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் மொத்தம் 1,685 கி.மீ அளவிற்கு புயலால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 8,216 மின் பணியாளர்களும் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 5,413 பணியாளர்களும் என மொத்தம் 13,619 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைக்கேற்ப மேலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.