9 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை... இளைஞர் கைது
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே 9 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாழையூத்தை அடுத்த குறிச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய் மற்றும் சந்தனமாரி தம்பதியின் 9 வயது மகன் கொம்பையா. மூன்றாம் வகுப்பு முடித்துள்ள கொம்பையா, கடந்த 26-ஆம் தேதி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு சென்றவன் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் பயனில்லாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், குறிச்சிக்குளம் அருகே உள்ள 4 வழிச்சாலையை ஒட்டியிருக்கும் முட்புதரில் கொம்பையாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிப்பது தெரியவந்தது.
கொம்பையா கொலை தொடர்பாக குறிச்சிக்குளத்தைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்பாலின உறவில் ஆர்வம் கொண்ட மாயாண்டி கொம்பையாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியில் சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில் கொம்பையாவை கொலை செய்ததாகவும் தெரிகிறது.