மண்ணடி: 80 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சென்னை மண்ணடி பகுதியில் கட்டடம் புனரமைக்கும் பணியின் போது, நான்கு மாடி கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்ணடி விபத்து
சென்னை மண்ணடி விபத்துPT

இன்று சென்னை மண்ணடி பகுதியில் நான்கு மாடி கட்டடமொன்றின் புனரமைக்கும் பணியின் போது, திடீரென்று கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இக்கட்டடம், சுண்ணாம்பு மற்றும் மண்ணால் கட்டப்பட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடமென சொல்லப்படுகிறது.

சென்னை மண்ணடி விபத்து
சென்னை மண்ணடி விபத்துPT

இந்த கட்டட விபத்தில் 4 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதாகவும், அவர்களை மீட்பதற்கான இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் இடுபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட, சென்னை அடையாறு பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தவும், அதிநவீன கருவிகளைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்காகவும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் நான்காவது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள், அதிநவீன மீட்பு கருவிகள் மற்றும் 2 மோப்ப நாய்களுடன் புறப்பட்டு சென்றனர்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேருPT

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் மீட்பு பணியை நேரில் பார்வையிட்டனர். அதற்குபிறகு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, விபத்தில் யாரும் சிக்கவில்லை என்று தெரிவிதார்.

இருப்பினும் 4 பேர்  இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்டட உரிமையாளர் பரத் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்து எஸ்பிளனேடு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். பரத் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த கட்டட காண்டிராக்டர் யார், பணியிலிருந்த தொழிலாளர்கள் யார் யார் என்ற முழுமையான விவரங்கள் தெரியவரும்.

தற்போது வரை 30 லாரிகளில் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று மணி நேரத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தை அகற்றும் பணி நிறைவு பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com