
80 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி இட்லி கடை நடத்தி வரும் பாட்டி ஒருவர் இன்றைய கால இளைஞர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் முன்னோடியாக இருக்கிறார்.
கோடம்பாக்கம் ஜெபிஆர் பள்ளி எதிரே அமைந்திருக்கும் ‘பாட்டி இட்லி கடை’ அப்பகுதியில் மிக பிரபலம். இக்கடையை நடத்தி வருபவர் 80 வயது பாட்டியான செல்வக்கனி. இந்த வயதிலும் ஓய்வின்றி சுறுசுறுப்பாக இயங்கி வரும் பாட்டி வாடிக்கையாளர்களுக்கு வாய்க்கு ருசியாக உணவு கொடுக்கிறார்.
பாட்டி இட்லி கடையை தொடங்கியதும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில்தான். பாட்டி செல்வக்கனியின் மருமகன் ஒரு இனிப்புக் கடையை நடத்தி வந்திருக்கிறார். அதில் உதவிக்கு பாட்டி செல்வக்கனி சின்னச் சின்ன வேலை செய்திருக்கிறார். அந்த நேரத்தில் மருமகன் மறைந்துவிட மகளும் கைக்குழந்தையுடன் தவிக்க இனிப்புக் கடையை கையில் எடுத்தார் பாட்டி செல்வக்கனி. ஆனால் வியாபாரம் மந்தமாக செல்ல ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார். அதாவது இனிப்புக் கடையை இட்லி கடையாக மாற்றினார். இது நடந்தது கடந்த 19 வருடங்களுக்கு முன்பு..
பாட்டி அன்று எடுத்த முடிவில் உறுதியாக இருந்து இன்றுவரை வாடிக்கையாளர்களுக்கு உணவும் கொடுத்து தன் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். தன் குடும்பமே தன் பலம் எனக் கூறும் பாட்டி செல்வக்கனி, காலை மற்றும் இரவு என இரண்டு வேலைகளில் கடை செயல்படும் எனக் கூறுகிறார். இக்கடையின் ருசியறிந்த வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக இக்கடையின் சாப்பிட்டு வருவதும் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த வயதிலும் கடுமையாக உழைத்து ஜொலிக்கும் பாட்டி செல்வக்கனி, இன்றைய இளைஞர்களுக்கும் ஒரு செய்தியை சொல்ல தவறவில்லை. அதாவது, “ எல்லா குழந்தைகளும் சிறப்பாக படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நீங்கள் கடினமாக உழைத்தால் உங்களது உடல் திடம்பெறும். என் ஆசையே எல்லோரும் ஆரோக்கியமும், திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான்” எனக் கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பாட்டி. ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பாட்டி இந்தக் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
Courtesy: The New Indian Express