3 வாரங்களாக அதிகரிக்கும் டெங்கு... சென்னையில் ஆலோசனைக் கூட்டம்!
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
வடகிழக்கு பருவமழை சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. அதில், தலைநகர் சென்னை, அண்டை மாவட்டமான திருவள்ளூர், கடலூர், மேற்கு மண்டலத்தின் முக்கிய நகரான கோவை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் டெங்கு பாதிப்பு சிவப்பு மண்டலத்தில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு மட்டுமின்றி, சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மலேரியா பாதிப்பும், திருச்சி, தஞ்சாவூரில் டைபாய்டு காய்ச்சலும் பரவலாகக் காணப்படுகின்றன. காய்ச்சலால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், "இந்த ஆண்டில் இதுவரை 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
பருவமழை குறையும்போது கொசுக்கள் உற்பத்தியால் இதுபோன்ற காய்ச்சல்கள் பரவுகிறது. வைரஸ் காய்ச்சலான டெங்குவுக்கு நேரடி மருந்து இல்லை. ’குழந்தைகளுக்குத் திட ஆகாரத்தைக் காட்டிலும், இளநீர், பால், கஞ்சி, பழச்சாறு போன்ற வடிவங்களில் நீர்ச்சத்து உடலில் சீராகச் சேர்வதுதான் முக்கியம். நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் மட்டுமே டெங்கு மரணங்களைத் தவிர்க்க முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். காய்ச்சல் குறைந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில்தான் தீவிர டெங்குவின் அறிகுறிகள் வெளிப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
வாந்தி, தீவிர வயிற்று வலி, உடல் சோர்வு, ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், அது அபாய எச்சரிக்கை என்றும், உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அலட்சியம் செய்தால், 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' ஏற்பட்டு, முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீரில்தான் உருவாகின்றன. எனவே, குடிநீர்த் தொட்டிகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாகச் சுத்தம் செய்வது அவசியம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடிக்கும் இந்த ஏடிஸ் கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, Odomos போன்ற க்ரீம்களை முழங்கால், முழங்கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி கொசுக் கடியில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். டெங்கு பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினருடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.