உணவில் விஷமா ? ஒருவர் உயிரிழப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீபெரும்புதூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 8 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ,ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது தங்கை முருகம்மாள் மற்றும் தம்பி அறிவுச்சுடர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று இரவு கீரை சாதம் சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண்கள் 4 பேர், ஆண்கள் 3 பேர், ஒரு குழந்தை என 8 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் 80 வயது மூதாட்டி சொக்கம்மாள் என்ற மூதாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் மேல்சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.