அதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு
8 வழிச்சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.