எட்டு கிலோ தங்கக் கட்டியை திருடிச்சென்ற கும்பல் - வடமாநிலத்தவர் கைவரிசையா?
கோவை அவினாசி சாலை சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவரை தாக்கி அடையாளம் தெரியாத நபர்கள் 8கிலோ எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீவ் சிங். இவர் கோவை மரக்கடை பகுதியில் வசித்து வருகிறார். இவர் தங்கநகை வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு விமானம் மூலம் சுமார் 8 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியை அனுப்ப இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பிரதீவ் சிங் வந்த வாகனத்தை வழி மறித்து தாக்குதல் நடத்தியது. மேலும் அந்தக் கும்பல் அவரிடமிருந்த தங்கநகைகளை பறித்து சென்றது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதீப் சிங் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு குற்றவியல் போலீசார் பிரதீவ் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீவ் சிங்கும் தான் கொண்டு வந்திருந்த தங்கம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் புகாரின் உண்மை தன்மை குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலை போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.