மின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த புட்லூர் கிராமத்தில் வசித்துவருபவர் அமிர்தம்மாள். இவருக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் போது அப்பகுதியில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் மின் வாரியம் அதனை கண்டுகொள்ளவே இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், இன்று அப்பகுதிக்கு அமிர்தம்மாள் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்த ஆடுகள், ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன. இதனைக்கண்ட அமிர்தம்மாள் கதறி அழுதுள்ளார். அங்கு திரண்ட மக்கள், 8 ஆடுகள் இறந்து கிடப்பதை அறிந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.