'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்!
'கஜா' புயல் பாதிப்பிலிருந்து செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் 'கஜா' புயல் உள்ளதாகவும், இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையைk கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 'கஜா' புயல் பாதிப்பிலிருந்து செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை மீட்கும் விதமாக 8,200 பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், ஆகிய பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
(மாதிரிப்படம்)
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ’கஜா’ புயல் கரையைக் கடக்கும்போது நாகை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.