
தருமபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின் கோரிக்கை காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வீட்டின் பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நெல் மூட்டைகள் அங்கிருந்து லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, நெல் மூட்டைகளை பிரமிட் வடிவில் அடுக்கப்படாமல் தாறுமாறாக அடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் நெல் மூட்டைகள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து சுமார் 7,000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதாக கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலக மண்டல மேலாளரிடம் நாம் கேட்டபோது...
“திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்துள்ளன. போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை. நெல் மூட்டைகள் குறைய வாய்ப்பில்லை. அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே 7,000 டன் நெல் மூட்டைகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 15,000 டன் நெல் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் நெல் மூட்டை அளவு குறைந்தது தெரியவந்தால், இது தொடர்பாக கண்காணித்து வந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் 22,000 டன் நெல் மூட்டைகள் தருமபுரி மாவட்டத்திற்கு வந்ததாகவும், அதில் 68 அரவை ஆலைகளுக்கு 7,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் 15,000 டன் தற்பொழுது கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் நெல் மூட்டைகள் முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு நெல் மூட்டைகள் குறைந்துள்ளதா என்பது குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், நெல் மூட்டைகள் குறைந்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில், நேற்று காலை முதலே நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக என்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் வரவழைக்கப்பட்டு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் தற்பொழுது மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த புகார் தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அலுவலர்கள் கொண்ட குழுவினர் அரவை ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், நுகர் பொருள் வாணிபக் கிடங்கு மூலம் அனுப்பப்பட்ட மூட்டைகள் மட்டுமே இருக்கிறதா, கூடுதலாக மூட்டைகள் இருக்கின்றனவா என்பது ஆய்வுசெய்யப்படும். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, நுகர் பொருள் வாணிப கிடங்கிற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்ய உள்ளார்.