ஒத்தையாய் உடைந்த கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்த முதியவர் - ஆச்சர்யத்தில் சக மீனவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒட்டு மொத்த மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் ஒத்தையாய் உடைந்த கட்டுமரத்தில் மீன் பிடிக்கச்சென்று பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான ஊளி மீன்களை முதியவர் ஒருவர் பிடித்து வந்தது சக மீனவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்றாலும், போதிய மீன்கள் கிடைக்காததாலும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய விசைப்படகு, பைபர் படகு என எதிலுமே மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த மீனவரான 70 வயது முதியவர் ஆன்றணி என்பவர் இன்று காலை எந்த தொழில்நுட்ப கருவிகளோ இஞ்சின்களோ இல்லாத உடைந்து கயிறுகளால் சுற்றி கட்டப்பட்ட கட்டுமரத்தில் துடுப்புகள் உதவியுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வலை வீசியுள்ளார். ஆச்சர்யவிதமாக அவரது வலையில் கொத்து கொத்தாக ஊளிழி மீன்கள் சிக்கியது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட முதியவர் கரை திரும்பிய நிலையில் அவரது வலையில் சுமார் 30 கிலோ வரை ஊளி மீன்கள் பிடிபட்டிருந்தது. துறைமுகத்தில் மீன் வரத்து இல்லாததால் முதியவர் பிடித்து வந்த மீன்களை சக மீனவர்களே தங்கள் வீட்டு தேவைக்காக கிலோ ரூ.200 வீதம் வாங்கிச்சென்ற நிலையில் முதியவருக்கு அந்த மீன்கள் சுமார் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஒட்டுமொத்த மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில், உடைந்த கட்டு மரத்தில் முதியவர் ஒருவர் ஒத்தையில் சென்று மீன்களை அள்ளிவந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.